Thursday, September 15, 2011

அரக்கோணம் ரயில் விபத்தில் மர்மம் : சிக்னல்களை மீறி ரயிலை டிரைவர் வேகமாக ஓட்டியது ஏன்?

சென்னை: அரக்கோணம் அருகே சித்தேரியில் நடந்த ரயில் விபத்தில், சிக்னலை மீறி ரயிலை டிரைவர் ஓட்டியதில் மர்மம் ஏதும் உள்ளதா, சதிச் செயல் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 9.12 மணிக்கு, சிக்னலுக்காக நின்றிருந்த அரக்கோணம் - காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது, சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து வேலூர் கன்டோன்மென்ட் சென்ற மின்சார ரயில், பயங்கரமாக மோதியது. இதில் 10 பயணிகள் உயிரிழந்தனர்; 86 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில், 90 கி.மீ., வேகத்தில் ரயில் மோதியதால் ரயில் இன்ஜின் சுக்குநூறாக நொறுங்கியது. இன்ஜினை தொடர்ந்து, இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கின. தொடர்ந்து உள்ள மூன்று பெட்டிகளும் சேதமடைந்தன. அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சித்தேரி வரை மூன்று சிக்னல்கள் உள்ளன. இதில் இரண்டு சிக்னல்கள் தானியங்கி சிக்னல்கள், இதில் விபத்து நடந்த சித்தேரி சிக்னல், ஆள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ரயில் வேகமாக வந்து மோதும் போது, சித்தேரி சிக்னலில் சிவப்பு சிக்னல் தான் இருந்துள்ளது. அரக்கோணம் - காட்பாடி பாசஞ்சர் ரயில் அங்குள்ள லூப்-லைனில் செல்வதற்காக, லூப்-லைன் கிரீன் சிக்னலை எதிர்பார்த்து நின்றிருந்துள்ளது. பீச் ரயில் வந்த பாதையில் சிவப்பு சிக்னல் தான் இருந்துள்ளது. பீச் ரயிலை ஓட்டிய டிரைவர் ராஜ்குமார், இச்சிக்னலை கவனிக்காததால் தான், ரயில் விபத்தில் சிக்கியுள்ளது என்று பேசப்படுகிறது. அவர், தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்ததால் நினைவின்றி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிரிஷன் கூறும் போது, "விபத்துக்கு சிக்னல் காரணமில்லை. சிக்னல்கள் சரியாகவே இயங்கியுள்ளன. பீச் ரயில் ஓட்டிய டிரைவர், கவனக்குறைவாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று சிக்னல்கள் கிளியராக இருந்தால் தான், அந்த வழியாக ரயில் செல்ல கிரீன் சிக்னல் கிடைக்கும். சித்தேரியில், சிவப்பு சிக்னல் தான் இருந்துள்ளது. சிவப்பு சிக்னல் இருந்தால் ரயில் வேகம் குறைக்கப்பட்டு, 15 கி.மீ.,வேகத்தில் தான் இயக்கியிருக்க வேண்டும். ஆனால், ரயில் 90 கி.மீ., வேகத்தில் வந்து மோதியுள்ளது. விபத்திற்கு காரணம், டிரைவரின் கவனக் குறைவு தான் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறும் போது, "விபத்திற்கு மனிதத் தவறுதான் காரணமென தெரிகிறது. ரயிலை ஓட்டிய டிரைவர் பலத்த காயமடைந்து, மயக்கமடைந்துள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவர் நினைவுக்கு வந்தவுடன், அவரிடம் நடத்தும் விசாரணையில் தான் விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்' என்றும் தெரிவித்துள்ளார். சிவப்பு சிக்னல் இருப்பது தெரிந்தும் டிரைவர், வேகத்தை குறைக்காமல் ஓட்டி, நின்றிருந்த ரயிலில் மோதியுள்ளார். டிரைவர் ஓய்வில்லாமல் ரயிலை ஓட்டியதால், கவனக்குறைவா அல்லது மது அருந்திவிட்டு ரயில் ஓட்டியதால் நடந்த விபத்தா என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், டிரைவர் மது அருந்தவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், ரயில் விபத்தில் மர்மம் இருப்பதாகவும், சதிச் செயல் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருவள்ளூர் புறநகர் மின்சார ரயிலை, மர்மநபர் எடுத்து 120 கி.மீ., வேகத்தில், பாதை மாற்றி ஓட்டி வியாசர்பாடி நிலையத்தில், எதிரே வந்த சரக்கு ரயிலில் மோதியதால் நான்கு பேர் இறந்தனர். இந்த விபத்து மர்மமே இன்னும் விலகவில்லை. சி.பி.சி.ஐ.டி., வசம் விசாரணையில் உள்ளது.

தமிழகத்தில் நடந்த பெரிய ரயில் விபத்துகள் 

1995, மே 14: சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், சேலம் அருகே சரக்கு ரயில் மீது மோதியதில், 52 பேர் பலி.
1998, ஆக., 13: சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் - சேலம் பை-பாஸ் ரோட்டில், ஆளில்லா லெவல் கிராசிங்கில், பஸ் மீது மோதியதில், 19 பேர் பலி.
2010, ஜூன் 4: கோவை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், ஆளில்லா லெவல் கிராசிங்கில், மினி பஸ் மீது மோதியதில், 5 பேர் பலி.
2011, செப்., 13: சித்தேரி ரயில் நிலையத்தில், நின்றுக் கொண்டிருந்த அரக்கோணம் - காட்பாடி பயணிகள் ரயில் மீது, சென்னை கடற்கரை - வேலூர் சென்ற மின்சார ரயில் பின்புறமாக மோதியதில், 10 பேர் பலி; 70க்கும் மேற்பட்டோர் காயம்.

ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இரண்டு நாட்கள் விசாரணை : சித்தேரி ரயில் விபத்து குறித்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சென்னையில், இரண்டு நாட்கள் விசாரணை நடத்துகிறார். இந்த விபத்து குறித்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் எஸ்.கே.மிட்டல் நாளையும் (16ம் தேதி) நாளை மறுநாளும் (17ம் தேதி) சென்னை சென்ட்ரலில் உள்ள, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை ரயில் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் நேரில் விசாரணை நடத்துகிறார். இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள், விபத்து குறித்து, தங்களுக்கு தெரிந்த தகவல்களை கடிதம் மூலம், பெங்களூரில் உள்ள தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அலுவலகத்திற்கு பேக்ஸ் மூலம், 080-222 60650 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறப்பு தகவல் மையம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டு, தகவல் தெரிவிக்க நான்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிலையத்திற்கு நேரில் வர முடியாதவர்கள், 044-2534 7771, 2535 7398 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More