கோவை: கோவை அருகே, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த, நேபாள சிறுமியர் 23 பேர் மீட்கப்பட்டதன் பின்னணி குறித்து, புதிய தகவல் வெளியாகியுள்ளது. சூலூர், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில், 500க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில், 23 சிறுமியர் நேபாள நாட்டைச் சேசர்ந்தவர்கள் என்றும், அறக்கட்டளை ஒன்றின் மூலமாக, இவர்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருப்பதாகவும், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், மைக்கேல் ஜாப் ஆதரவற்றோர் இல்லத்தில் சோதனை நடத்திய மாவட்ட நிர்வாகம், நேபாளத்தைச் சேசர்ந்த 23 சிறுமியரை மீட்டு பீளமேடு, காந்திமாநகரில் உள்ள, அரசு பெண்கள் மற்றும் குழுந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளது.இக்குழந்தைகள், நேபாளத்தில் இருந்து எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தனர், அழைத்து வர ஏற்பாடு செய்தவர்கள் யார், நோக்கம் என்ன, என்பது குறித்து விசாரணை நடக்கிறது. அதேவேளையில், ""எங்களது இல்லத்தில், முறைகேடுகள் நடக்கவில்லை. நேபாளத்தில் ஆதவற்ற நிலையில் பரிதவித்த குழந்தைகளை மீட்டு, உரிய சட்ட வழிமுறைகளின்படியே, இந்தியாவுக்கு அழைத்து வந்து பராமரித்து வருகிறோம்'' என, மைக்கேல் ஜாப் இல்ல நிர்வாகிகள், கோவை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும், நேபாள குழந்தைகளைத் தங்க வைத்து, படிக்க வைப்பது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், அந்த இல்லத்தில் நேபாள குழந்தைகளைத் தங்க வைத்து பராமரிப்பது தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளதால், அவர்களை மீட்டு பீளமேட்டிலுள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறது மாவட்ட நிர்வாகம். நேபாள குழந்தைகள் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடைகாண, போலீசும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.
இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நேபாளத்தில், மாவோயிஸ்ட்களின் தாக்குதல், முன்னர் அதிகமாக இருந்தது. பல தாக்குதல் சம்பவங்களில், எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். அவர்களின் குழந்தைகள் அனாதையாகி பரிதவித்தனர். அங்குள்ள அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு, டில்லியில் இருக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளன. நேபாளத்தில் வசிக்கும் பெற்றோர் சிலரும், தங்களது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும், உயிர் பாதுகாப்பு கருதியும் "அனாதை' என குறிப்பிட்டு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக, இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இக்குழந்தைகள், டில்லியில் இருந்து குழு, குழுவாக, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு, அரசு சாரா தொண்டு நிறுவன பராமரிப்பில் விடப்பட்டனர். தற்போது, நேபாளத்தில் மாவோயிஸ்ட்களின் பிரச்னை ஓய்ந்து, மாமூல் வாழ்க்கை திரும்பிவிட்டது. இதனால், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தைகளை, நேபாளத்துக்கு மீண்டும் அழைக்கும் விதமாக, பெற்றோரில் சிலர், டில்லியிலுள்ள நேபாள தூதரகத்தின் உதவியை நாடிள்ளனர். அதன் விளைவாகவே, கோவை, சூலூரில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகளில், அனாதை குழந்தைகளும் அதிகம் உள்ளனர். மற்றபடி, அந்த ஆதரவற்றோர் இல்லத்தில், மதமாற்ற முயற்சி நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக, புகார் ஏதும் இதுவரை இல்லை; இருப்பினும், அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.





0 comments:
Post a Comment