
லண்டன்: இந்தியாவுக்கு நேரம் ரொம்பவே மோசமாக உள்ளது. 4வது ஒரு நாள் போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி டையில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி தொடரை வென்று விட்டது.
டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த இந்தியா, ஒரு நாள் தொடரை நம்பியிருந்தது. ஆனால் தற்போது அதுவும் அம்போவாகி விட்டது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, அடுத்த 2 போட்டிகளை இங்கிலாந்து வென்று விட்டது.
இந்த நிலையில் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 4வது போட்டியில் இந்தியா சிறப்பாக பேட் செய்தது. அருமையாகஆடிய இந்திய அணியினர் 280 ரன்களைக் குவித்தனர்.
ஆனால் பின்னர் வந்த மழையால் போட்டியின் போக்கு மாறிப் போனது. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் பெய்த மழை நின்றபோது மீண்டும் ஆட முடியாத அளவுக்கு நேரமின்மை வந்து சேர்ந்தது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்த்தபோது இரு அணிகளும் சம ஸ்கோரை எடுத்திருப்பதாக அறிவித்து போட்டி டையில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடரை வென்று விட்டது. உண்மையில் இந்தப் போட்டி தொடர்ந்திருந்தால் இங்கிலாந்தே வென்றிருக்கும். ரவி போபரா அருமையாக ஆடி 96 ரன்களைக் குவித்து இங்கிலாந்தை வெற்றிக்கு வெகு அருகில் கொண்டு சென்றிருந்தார். அவரும், ஸ்வானும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் குவித்தனர்.
முன்னதாக இந்திய அணியில் சுரேஷ் ரெய்னாவும், டோணியும் பிரமாதமாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் இணைந்து 169 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்தின் பேட்டிங்கின்போது அந்த அணி ரன் குவிக்கத் தடுமாறியது. ஆனால் ரவி போபரா வந்த பின்னர்தான் நிலைமை மாறியது.
அதேபோல இயான் பெல்லும் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். மேலும் டிம் பிரஸ்னன், ஸ்வான் ஆகியோரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரஸ்னன் 27 ரன்களை விரைவாக குவி,த்தார்.
நேற்றைய இந்தியப் பந்து வீச்சில் ஆர்.பி.சிங் பரிமளித்தார். ஆனால் ரவி போபரா அனைவரது கனவுகளையும் தவிடு பொடியாக்கி விட்டார்.
அடுத்து கார்டிப் மைதானத்தில் கடைசி போட்டி நடைபெளவுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி தொடரை வென்று விட்டதால், இந்தியாவுக்கு இந்தப் போட்டியால் எந்தப் பெருமையும் கிடைக்கப் போவதில்லை.





0 comments:
Post a Comment