வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால் இந்தியாவிற்கு இதில் கடைசி இடம்தான்.
தேர்தல்கள் மூலம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசில் ஆள்வோருக்கும்,
அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து வருபவை ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும் என்றால் அது மிகையல்ல. ஊழல்வாதிகள் மீது துணிச்சலான நடவடிக்கை எடுக்க இயலாத, பலகீனமான தலைமையை நாடு பெற்றிருப்பது-துரதிருஷ்டவசமா
இந்திய ஜனநாயகத்தை செல்லரிக்க வைத்துக் கொண்டிருப்பதே ஊழல் அரசியல்வாதிகள்தான். வலுவற்ற சட்டங்களால் 94 சதவீதம் பேர், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பி விடுவதாகக் கூறப்படுகிறது. சட்டம் என்பது சாமானியர்களைத் தண்டிக்க மட்டும் அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு நீதித்துறைக்குஉண்டு. பொறியில் மாட்டிக் கொண்ட எலி, தப்பிக்கும் வாய்ப்பை கடைசிவரை நழுவ விடாது...'அதேபோல, லட்சக்கணக்கில் ஊழல்செய்து மாட்டிக் கொள்ளும் அதிகாரிகள், நெஞ்சுவலியை (?) காரணம் காட்டி ஜாமீனில் வெளிவருகின்றனர். அதன்பிறகு, அவர்களது முதல் பணி, ஊழல் வழக்கிலிருந்து விடுபட என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை சாத்தியக் கூறுகளையும் கையாள்வது. பதவிக்காலத்தில் அரசியல்வாதிகளுக்குச் செல்லப் பிள்ளைகளாக நடந்துகொண்டு,முறைகேடுகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், ஊழல் வழக்குகளில் சிக்கினாலும், சிறிது காலத்தில், அதிலிருந்து லாவகமாக வெளிவந்து, மீண்டும் பதவிகளைப் பெற்றுவிடுவதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்க்கின்றனர். உதாரணமாக மணல் குவாரிகளில் நடக்கும் முறைகேடுகளைச் சொல்லலாம். ஆறுகளில் 3 அடிக்கு கீழே, மணல் அள்ளக்கூடாது என்பது விதி. அதனை வலியுறுத்தி, குவாரிகளில் ஒப்புக்குப் பதாகை வைக்கப்பட்டிருக்கும். ஆனால், குவாரிகளில் 20 அடிக்கும் குறையாமல் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டால், இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதால் எத்தனை அடிகள் அள்ளுகின்றனர் என்பதைக் கணக்கிட இயலவில்லை எனச் சாதாரணமாக பதில் அளிக்கின்றனராம். 3 அடி ஆழத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் வித்தியாசம் தெரியாதா? தற்போது ஊழல் நோய் முற்றி, அனைத்துத் துறைகளிலும் புரையோடி விட்டதால், 50ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசுகள், திடீரென விழித்துக் கொண்டு ஊழலை ஒழித்து,வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கப் போவதாக அறிவித்து, தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன. ஆனால், அச் சட்டத்தின் பல ஷரத்துகள் சாமானிய மனிதர்களைச் சென்றடையும் வகையில், முழுமையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஊழலுக்கு எதிரான சட்டங்கள் பலமாக இல்லாததே, அதில் ஊறித் திளைப்போருக்கு சாதகமாக உள்ளது என்கிற அடிப்படை உண்மை கூடவா அரசுக்குத் தெரியாமல் போனது! முறைகேடுகளுக்குத் துணைபோகாத, சிபாரிசுகளை ஏற்காத நேர்மையான அதிகாரிகளின் துறைகளை மாற்றிப் பந்தாடுவதும், லாயக்கற்றவர்களை, தமக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளில் அமரவைத்து, காரியம் சாதித்துக் கொள்வதும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கைவந்த கலையாகிவிட்டது. திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறெங்கும் பதுக்கப்படாமல், முழுமையாகச் செலவிட்டாலே போதும் நாடு வல்லரசாகும்... சுவிஸ் வங்கிகள் திவாலாகும்! ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா வெகுவேகமாக பின்னேறிச் செல்வதற்கு முக்கியக் காரணம், கூட்டுவைத்துக் கொள்ளை அடிக்கும் மனோபாவம்தான். தேர்தலின்போது அணிமாறும் அரசியல் கூட்டணியை விட, இக்கூட்டணி ஆபத்தானது. சில நேர்மையான அலுவலர்களையும் டிரான்ஸ்பர், டம்மி போஸ்ட் என இக்கூட்டணி நோகடிக்கச் செய்கிறது. ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தற்போது 74-வது இடத்தில் உள்ளதாக ஓர்ஆய்வு-தெரிவிக்கிறது. ஊழலின் வேர்களை அழிக்காமல், கிளைகளை மட்டும் வெட்டிக் கொண்டே இருந்தால், இப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! |
இன்னமும் கூசாமல் ஆதரிக்கிறது பாரதிய ஜனதா.
பிரமாண்டமான வீடு, ஆடம்பரமான அறைகள், கண்ணை கவரும் அலங்கார பேழைகள், விலை மதிப்பற்ற கலை பொருட்கள் என்று பார்த்து பார்த்து தலை சுற்றுகிறது மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு. இந்தியாவை சுரண்டி கொழுத்த வெள்ளைக்காரனை விரட்டியடித்த பின்னர் 65ஆண்டுகளாக அந்த பணியை நம்மவர்களே கவனித்து வருகின்றனர். உலகம் முழுவதும் தெரிந்த இந்த ரகசியம் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் ஹைதராபாதில் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்தபோதும், இப்போது பெல்லாரியில் ஜனார்தன ரெட்டியின் மாளிகைக்குள் புகுந்தபோதும் பிரமிப்பில் திறந்த வாய் மூடாமல் பார்த்திருக்கிறார்கள்.
சொகுசு வட்டாரமான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஜெகன் வசிக்கும் மாளிகை 32 ஏக்கரில் 350கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டதாம். 75 அறைகளை சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாதாம்.அதற்கே கிர்ர்ரடித்து நின்ற அதிகாரிகள் பெல்லாரியில் ஜனார்தன ரெட்டியின் குடிலுக்குள் & அதுதான் அவர் சூட்டிய பெயர் & நுழைந்ததும் அரண்டு விட்டார்கள். கேட்டில் இருந்து வாசல் கதவை எட்டுவதற்குள் மூன்று இடங்களில் சோதனை சாவடிகள்; எந்திர துப்பாக்கி ஏந்திய சீருடை காவலர்கள். வீட்டின் உள்ளே விசாலமான நீச்சல் குளம். அதன் ஒதுக்குப்புறமாக ஒரு ஹெலிகாப்டர். 70 எம்எம் தியேட்டர். விளையாட்டு மைதானங்கள். ரகம் ரகமான வெளிநாட்டு கார்கள். சந்தன மேடையில் டாலடிக்கும் ஐம்பது கோடி மதிப்புள்ள நவரத்ன கிரீடம்.. சினிமா செட் போடுபவர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகளாம்.
பெயருக்கு 68 ஏக்கரில் சுரங்கம் தோண்ட லைசன்ஸ் பெற்று, அந்த இடத்தை தோண்டாமல் ரிசர்வ் காட்டுக்குள் தாறுமாறாக சுரங்கம் வெட்டி 29 லட்சம் டன் இரும்பு தாது லபக்கி சீனாவுக்கு அனுப்பினால் பணம் கொட்டாமல் என்ன செய்யும்? இவர் ஆந்திராவில் உருக்கு ஆலை அமைக்க ஜெகன் அப்பா ராஜசேகர் 11 ஆயிரம் ஏக்கர் நிலமும், அருகில் ஏர்போர்ட் கட்ட மூவாயிரம் ஏக்கரும் கொடுத்தார். ஒய்எஸ்ஆர் எனக்கு தந்தை; ஜெகன் என் தம்பி என்று உருகினார் ஜனார்தன். அவரை உத்தமர் என இன்னமும் கூசாமல் ஆதரிக்கிறது பாரதிய ஜனதா. ஜனா யாரென்றே தெரியாது என்கிறார் ஜெகன். அடங்கமாட்டார்கள், சாமி.
காலை டிபனுக்காக ஹெலிகாப்டரில் பறந்த ஜனா :
கைதிகளோடு வரிசையில் நின்று சாப்பிடுகிறார்
ஐதராபாத்: ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சிறையில் வரிசையில் நின்று சாப்பாடு பெற்று, சாப்பிட்ட பின் தட்டை கழுவி வைக்கிறார் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்கத்தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, முறைகேடாக சுரங்க தொழில் நடத்தியதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் வீட்டில் சோதனை நடத்தி, 30 கிலோ தங்கமும், பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர ஐகோர்ட் உத்தரவை அடுத்து, சி.பி.ஐ., இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது, ஐதராபாத்தில் உள்ள சஞ்சலகுடா சிறையில் ஜனார்த்தன ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் இவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். காலையில் டிபன் சாப்பிடுவதற்காக பெல்லாரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு வந்து செல்லும் வழக்கம் உடைய ஜனார்த்தன ரெட்டி, தற்போது, சிறையில் கொடுக்கப்படும் அளவு சாப்பாட்டை வரிசையில் சக கைதிகளுடன் நின்று வாங்கி செல்கிறார். சாப்பிட்டு முடிந்ததும் அந்த தட்டை கழுவி வைக்கிறார் என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை அதிகாரி இது குறித்து குறிப்பிடுகையில், "சிறையில் சிறப்பு அந்தஸ்து கேட்டு ஜனார்த்தன ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. தினமும், 600 கிராம் சாதமும், 100 கிராம் பருப்பும், கால்கிலோ காய்கறியும் உணவாக அளிக்கப்படும். நேற்று முன்தினம் அவர் வெறும் தரையில் தான் படுத்து தூங்கினார். அவரது துணியை அவரே தான் துவைக்க வேண்டும். அவர் தங்கும் இடத்தை அவரே தான் பெருக்கி தூய்மை செய்ய வேண்டும். வரும் 19ம் தேதி வரை அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது' என்றார். தற்போது ஜனார்த்தன ரெட்டியுள்ள சஞ்சலகுடா சிறையில் தான், சத்யம் மோசடியில் கைதான ராமலிங்கராஜு அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, கோர்ட் அனுமதியுடன் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. |





0 comments:
Post a Comment