Wednesday, September 14, 2011

ஓட்டுனரின் கவனக்குறைவே அரக்கோணம் ரயில் விபத்திற்கு காரணம்: 10 பேர் பலி: பலர் காயம்

சென்னை: அரக்கோணம் அருகே, சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் பலியானார்கள். இந்த விபத்திற்கு சென்னையிலிருந்து வேலூர் சென்ற மின்சார ரயிலின் ஓட்டுனரே காரணம் என்ற ரயில்வே பொதுமோலாளர் தீபக் கிஷன்தெரிவித்தார். 

அரக்கோணத்திலிருந்து, நேற்று இரவு, காட்பாடி சென்ற பயணிகள் ரயில், சித்தேரி அருகே, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை, கடற்கரையிலிருந்து வேலூர் சென்ற புறநகர் மின்சார விரைவு ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ஐந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இதில், நின்று கொண்டிருந்த ரயிலின் கார்டும், மோதிய ரயிலின் டிரைவர் உட்பட 10 பேர் பலியாயினர் மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்பு பணிகள் தீவிரம்: விபத்து நடந்த இடத்திற்கு, சென்னையிலிருந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தால், சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 9 மணிக்கு மேல் புறப்படும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மீட்புப்பணிகள் பாதிப்பு: அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ததால், மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விபத்து குறித்த விவரங்களுக்கு அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 044 25347771, 25357398 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

நிவாரணம் அறிவிப்பு : ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண உதவியாக அளிக்கப்பட உள்ளது.

சென்னை வந்தார் திரிவேதி : ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி சென்னை வந்தார். பின்னர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் இணைய அமைச்சர் முனியப்பா, ரயில்வே வாரியத்தலைவர் குப்தா ஆகியோரும் சென்றனர். இந்த விபத்து தன்னை மிகவும் பாதித்ததாகவும் . மீட்புப்பணி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் திரிவேதி தெரிவித்தார்.
சிக்னல் கொடுத்தும் அதை கவனிக்கமால் அதிகவேகமாக ரயிலை ஓட்டியதே விபத்திற்கு காரணம் , டிரைவர் எதற்காக வேகமாக ஓட்டிவந்தார் என தெரியவில்லை. எனவும் கூறினார்.
முதற்கட்ட விசாரணை : சிக்னலை கவனிக்காமல் ரயிலை ஒட்டிச் சென்ற டிரைவர் தான் இந்த விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள்: சித்தேரி ரயில்விபத்து சம்பவத்தில் பலியானவர்களின் பெயர் விபரம் தெரியவந்துள்ளது: அவர்கள் ரகு, பரசுராம், கீழ்ஆவதம் சேட், கீழ் சண்டிகை கிரீஷ்குமார், கீழ்விராணம் கவிதா, சதீஷ்குமார், சிவலிங்கம், முனியப்பன், புலிவலம் விநாயகம் மற்றும் ரயில்வே கார்டு ரகு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 36 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பெண்கள், 26 பேர் ஆண்கள் ஆவர். மேலும் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவரி சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீயணைப்புப்படையினர், போலீஸ் கமாண்டோப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ரயில்நேரம் மாற்றியமைப்பு: அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் விபத்து காரணமாக முக்கிய ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படவேண்டிய ஆமதபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.30க்கும், மங்களூரு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் ரயில் 5.30க்கும், திருவனந்தபுரம் செல்லும் ரயில் மாலை 6.05க்கும் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

5விரைவு ரயில்கள் ரத்து: சித்தேரி ரயில் விபத்து சம்பவம் ‌எதிரொலியாக கோவை, தூரந்தோ, ஏலகிரி, மங்களூர், பிருந்தாவனம் உள்ளிட்ட 5 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More