நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொ...லைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும்
கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தாம்ஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் 'அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபி' என்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் ''உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்'' என்று கூறினான். மற்றொருவன் ''அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டான்.
மூன்றாமவன், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்ல'' என்று கூறினான். அப்போது நபி (ஸல்) ''இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்'' என்று
கூறினார்கள்.
நபி (ஸல்) தாம்ஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாகவெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.
இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாம்ஃபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள்.
அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை
அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததினால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
இதோ நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனை:
''அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம்மிகப்பெரி
அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை
செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.''
நபி (ஸல்) அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் ''திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடு'' என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி சாப்பிட்டார்கள்.
இதைக் கண்ட அத்தாஸ் ''இந்தப் பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேச்சல்லவே; உங்களுக்கு இது எப்படித் தெரியும்?'' என்று கேட்டார். அதற்கு, ''உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?'' என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் ''நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்'' என்றார். ''நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?'' என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சயத்துடன் ''யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்'' என்றார். ''அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார் நானும் இறைத்தூதர் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் ''இதோ உனது அடிமையை அவர் குழப்பிவிட்டார்'' என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் ''உனக்கு என்ன கேடு நேர்ந்தது?'' என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ், ''எனது எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதனை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது'' என்றார். அதற்கு அவ்விருவரும் ''அத்தாஸே! உனக்கென்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடாமல் இருக்கட்டும். உமது
மார்க்கம்தான் இவன் மார்க்கத்தைவிட சிறந்தது'' என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் 'கர்னுல் மனாஜில்' என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல்
ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா''? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ''உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?'' என்று கேட்டேன்.
அதற்கு ''உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது 'யவ்முல் அகபா' என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி 'கர்னுல் மனாஜில்' என்ற பெயருள்ள 'கர்னு ஸஆலிப்' என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து 'நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்' என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி ''முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ''அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை தெரியவருவதுடன், அவர்கள் எத்தகைய
மகத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
அர்ரஹீக்குல் மக்தூம்
0 comments:
Post a Comment