Thursday, August 11, 2011

குர்ஆன் ஓதுங்கள்

    LISTEN & READ HOLY QURAN FREE WITH URDU,ENGLISH & ARABIC 
     TRANSLATION        www.quranexplorer.com/quran
               Or just click the quran picture site open automatically

குர்ஆன் ஓதுங்கள்
 

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்: அபூ உமாமா (ரலி))


இறைமறையை நாம் ஓதும்போது மறுமை நாளில் அது நமக்கு பரிந்துரை செய்கிறது. நரக நெருப்பை விட்டும் அது நம்மை காப்பாற்றுவதாக அமைகிறது. இன்னும் நன்மைத் தட்டு கனக்க காரணமாகிறது. மேலும் பல்வேறு நன்மைகளை நமக்கு கிடைக்கச் செய்கிறது.


நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). (திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))


நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி))


பொருளறிந்து உள்ளச்சத்தோடு ஓதுதல்
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்-குர்ஆன் 4:82)

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை! (அல்-குர்ஆன் 17:41)


அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இருதயங்கள் ((இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். இன்னும் இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகிறான். (முஸ்லிம்: உமர் பின் கத்தாப்(ரலி))



திருக்குர்ஆனை நிதானமாக ஓதவேண்டும்.
இஷாத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூனி ஸுராவை ஓதினார்கள். அவர்களைவிட அழகான, இனிமையான குரலை எங்குமே நான் கேட்டதில்லை. (புகாரி, முஸ்லிம்: பராவு பின் ஆஸிப் (ரலி))


நபி(ஸல்) அவர்கள் (அபூமூஸாவே) நீர் நபி தாவூது (அலை) அவர்களின் குடும்பத்தினரின் இசைக் கருவிகளில் ஒன்றைக் (இனிய குரலை) கொடுக்கப்பட்டுவிட்டீர். (அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)
குர்ஆனை மிக அழகிய இனிமையான குரலில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்) ((ஆதாரம் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி))


முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்களிடம், நேற்றிரவு நான் உமது கிராஅத்தைக் கேட்பதை நீர் பார்த்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பீர் எனக் கூறினார்கள்.


குர்ஆன் ஓதுபவரின் மறுமை நிலை மிக்க மகத்தானது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி))


திருக்குர்ஆனை மனனம் செய்வது
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனை அடிக்கடி ஓதி அதனைப் பேணிப்பாதுகாத்து வாருங்கள். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (திரும்பத் திரும்ப ஓதி அந்தக் குர்ஆனைப் பாதுகாக்க வில்லையென்றால்) அந்தக் குர்ஆன், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓட்டகை கட்டிலிருந்து விலகி விரண்டோடுவதைவிட மிக வேகமாக (உங்கள் உள்ளங்களிலிருந்து விலகி) விரண்டோடிவிடும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம். அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி)) 
 
"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது
எம் கடமை"

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More