
தற்போது, ஏர் - இந்தியா பைலட்கள் நிர்வாகிகளாக உள்ளனர். 80 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த கிளப்பில் இருந்து, 300க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று, பைலட்களாகியுள்ளனர். இவர்கள், இந்திய விமானங்களில் மட்டுமல்லாது, சர்வதேச விமானங்களிலும் பணியாற்றுகின்றனர். "பிளையிங் கிளப்'கள் மத்திய, மாநில அரசின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள், பைலட் பயிற்சியில் சேரலாம். அவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். பைலட் பயிற்சிக்கான காலம், குறைந்த பட்சம் இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகளும், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகும். இப்பயிற்சியில் சேரும் மாணவரின் கட்டணம், 15 லட்சம் ரூபாய். தனியார் பைலட் பயிற்சி நிறுவனங்களில், 20 முதல் 30 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. "மெட்ராஸ் பிளையிங் கிளப்'பிற்கு தற்போது, நிரந்தர மானியமாக, 3 லட்சத்து 80 ஆயிரம், பெட்ரோல் மானியமாக 3 லட்சத்து 72 ஆயிரம் என, ஆண்டிற்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே தமிழக அரசு அளித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பயிற்சியை முடித்து வெளிவருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
இது குறித்து, "பிளையிங் கிளப்'பின் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், தங்கள் மாநிலங்களில் உள்ள, "பிளையிங் கிளப்'களை ஊக்குவித்து வருகின்றன. கேரள அரசு, தனது மாநில, "பிளையிங் கிளப்'பிற்கு, ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாயும், கர்நாடக அரசு 50 லட்சம் ரூபாயும் மானியமாக அளிக்கிறது. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்காக தனி துறையே ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் போக்குவரத்துத் துறையின் கீழ், "மெட்ராஸ் பிளைங் கிளப்' இடம் பெற்றுள்ளது. பைலட் பயிற்சி கட்டணம் அதிகமாக இருப்பதால், வசதி படைத்தவர்கள் மட்டுமே இதில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. நடுத்தர வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர், பைலட் ஆவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. நடுத்தர வகுப்பு மாணவர்களும் பைலட் பயிற்சியில் சேருவதற்கு உதவும் வகையில், "மெட்ராஸ் பிளையிங் கிளப்'பிற்கு அரசு அளித்து வரும் மானியத்தை அதிகரிக்க வேண்டும்.
"மெட்ராஸ் பிளையிங் கிளப்பை அரசே ஏற்று நடத்துவதற்கு முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்துள்ளார்' என்று, கடந்த 1995ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், சட்டசபையில் அறிவித்தார். அதை தொடர்ந்து, அதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், அதை நடைமுறைப் படுத்துவதற்குள், அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்தது. அடுத்து பதவியேற்ற தி.மு.க., அரசு, இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. அதன்பின், "மெட்ராஸ் பிளையிங் கிளப்' குறித்த சிக்கலுக்கு தீர்வு காண, ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில், ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட இருந்த, புதிய விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரில் ஒரு அகடமி துவக்கி, அதன் மூலம் பைலட் பயிற்சி அளிக்க, முந்தைய அரசு திட்டமிட்டது, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதற்கு மத்திய அரசின் உதவியும் கோரப்பட்டது. ஆனால், "பிளையிங் கிளப்' விஷயத்தை பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க மாநில அரசின் விவகாரத்திற்கு உட்பட்டது. எனவே, எவ்விதமான மானியமோ, உதவியோ செய்ய முடியாது என்று டி.ஜி.சி.ஏ., கைவிரித்துவிட்டது. இதையடுத்து, புதிய அகடமி துவக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடம் தேவையாக இருப்பதால், சென்னை விமான நிலையத்தில் இயங்கும், "மெட்ராஸ் பிளையிங் கிளப்'பை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன், டி.ஜி.சி.ஏ., நோட்டீஸ் கொடுத்தது. இது, 80 ஆண்டுகள் பழமையான, "மெட்ராஸ் பிளையிங் கிளப்'பிற்கு பேரிடியாக இறங்கியுள்ளது. தமிழக அரசு, "மெட்ராஸ் பிளையிங் கிளப்'பிற்கு உதவ முன்வர வேண்டும். அப்போதுதான், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பைலட் ஆகும் கனவு நிறைவேறும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment